சிவகங்கை: கூலித்தொழிலாளி ஒருவர் மண்ணில் புதைத்து வைத்த ரூ.1 லட்சம் மதிப்பிலான நோட்டுகள் கரையான் அரித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளாதரி கிராமத்தில் முத்து கருப்பி (30). கூலித் தொழிலாளி. ஏழ்மையில் வாடும் அவர் குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைக்கத் திட்டமிட்ட அவர் இதற்காக தகர உண்டியல் ஒன்றை தயார் செய்துள்ளார்.
தினமும் சம்பளப் பணத்தை ரூ.500 ஆக மாற்றி, அந்த உண்டியலில் 1 லட்ச ரூபாய் வரை சேர்த்து வீட்டிற்கு உள்ளேயே பள்ளம் தோண்டி மண்ணில் புதைத்து வைத்துள்ளார்.
மகளுக்குக் காதணி விழா நடத்த செவ்வாய்க்கிழமை (06.05.2025) காலை உண்டியலைத் திறந்து பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது.
சிறுகச் சிறுக ஓராண்டிற்கு மேலாக சேமித்த பணத்தை கரையான் அரித்துள்ளது. சேமிப்புப் பணம் முழுவதும் வீணாகிவிட்டதால், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணீர் வடிக்கும் முத்து கருப்பி, தனக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்