புதுடெல்லி: கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களுடைய இந்தியக் குடியுரிமையைத் துறந்துவிட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான புதிய தரவை இந்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த ஆண்டில் (2024) மட்டும் ஆக அதிகமாக 206,378 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அண்மையில், மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார்.
கடந்த 2022, 2023ஆம் ஆண்டுகளைவிட, கடந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலானவர்களே குடியுரிமையைத் துறந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இந்தியர்கள் பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று அங்கேயே நிரந்தரவாசிகள் ஆன பின்னர், இந்தியக் குடியுரிமையைத் துறக்கும் போக்கு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் 2022ஆம் ஆண்டுதான் ஆக அதிகமாக, 225,620 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்றார் கீர்த்தி வர்தன்.
2023இல் 216,219 பேரும், 2021இல் 163,370 பேரும் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த எண்ணிக்கை 2020இல் 85,256 ஆகவும் 2019இல் 1,44,017 ஆகவும் பதிவாகி உள்ளது.
2020இல் அனைத்துலக அளவிலான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த எண்ணிக்கை குறைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதே வேளையில், ஏராளமான இந்தியர்கள் தாய்நாட்டுக் குடியுரிமையை விட்டுக்கொடுக்காமல், வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, இந்தியக் குடியுரிமையைக் கைவிடுவதில் உள்ள நடைமுறை குறித்து எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்து, வெளியுறவு அமைச்சு மேற்குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டது.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளத்தின் மூலம் இந்தியக் குடியுரிமையைக் கைவிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் அதன் பின்னர் விண்ணப்பதாரர்களின் கடப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
ஆவண சரிபார்ப்பு முடிந்ததும், விண்ணப்பதாரர் ஒரு துறப்புச் சான்றிதழை இணையம் வழி பெறுவார்.
வழக்கமாக, 30 முதல் 60 நாள்களுக்குள் அதிகாரபூர்வமாக இந்தியக் குடியுரிமையைத் துறக்க முடியும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
அதன் பின்னர், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, அனைத்திந்திய ஓட்டுநர் உரிமம் என விண்ணப்பதாரர் இந்தியாவில் பெற்ற ஆவணங்கள் எதுவும் செல்லுபடி ஆகாது.