புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து, நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மாநில சட்டப்பேரவைகளுக்கும் நாடாளுமன்றத்தில் மக்களவைக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.
வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்தப்படுவதால் பணம், நேரம், உழைப்பு வீணாவதாக மத்திய பாஜக அரசும் கூறுகிறது.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் காரணமாக, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ளது.
எனினும், மத்திய அரசின் இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.
அரசியல் அமைப்புக்கு எதிராக பாஜக செயல்படக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தேர்தல் குறித்து பல மாதங்கள் ஆராய்ந்து மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன் அடிப்படையில், மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், அதானி விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.