புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நாடாளுமன்றக் குழு (JPC) இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் சென்ற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், முன்னாள் நீதிபதிகள், துணை ராணுவப் படையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோரையும் சந்தித்துப் பேச அந்தக் குழு முடிவு செய்துள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி மக்கள் எந்த வகையில் தெரிந்து வைத்துள்ளனர் என்பதைத் தெளிவாகக் கண்டறிவது அந்தப் பயணத்தின் நோக்கம் என்று அதுபற்றி அறிந்தவர்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) தெரிவித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் குறிப்பிட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.சௌத்ரி தலைமையிலான அந்தக் குழு, மத்திய உள்துறைச் செயலாளர், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் போன்றோரின் பரிந்துரைப்புகளை நாடும்.
இந்தியாவின் நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்பது பிரதமர் மோடி அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டம்.
அதற்காக இரண்டு மசோதாக்களைக் குழு தயார் செய்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான ஒரு மசோதாவும் யூனியன் பிரதேசங்களையும் ஒரே தேர்தல் திட்டத்தில் கொண்டு வரும் மற்றொரு மசோதாவும் குழுவின் கவனத்தில் உள்ளன.

