சென்னை: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சமாக மாறிவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இந்தியா ஒரு தீர்மானத்தை முன்மொழிந்திருப்பதே தமது கூற்றுக்கு நல்ல சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல், ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அந்தத் தீர்மானத்திற்கு 135 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தத் தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்திருப்பது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
எந்தவித நிபந்தனையும் இன்றி வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானைக் கண்டிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த இந்தியா, அந்நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தும் போரையும் 1,300 ஈரான் குடிமக்கள் கொல்லப்பட்டதையும் கண்டிக்கவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 168 குழந்தைகள் மாண்டுபோனது குறித்து இந்தியா ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை என சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“ஐநா பாதுகாப்பு மன்றத்தில் அமெரிக்கா, 12 நாடுகளின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை.
இதில் எது விவேகம்? எது அரச தந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை?,” என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

