தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள அரசு உரிமம் பெற்ற ஓஎன்ஜிசி எனப்படும் நிறுவனத்துக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் கன்னியாகுமரியை அடுத்த ஆழ்கடல் பகுதியில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஓரிடத்திலும் எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கப்படும். இதற்கான சுற்றுச்சூழல், பசுமை ஒப்புதலை பெற்ற பின், விரைவில் பணிகள் தொடங்கும் என அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
இந்தக் கடலடித் திட்டத்தை எளிதில், பாதுகாப்பாக நிறைவேற்றச் சுற்றுச்சூழல் முன்னெச்சரிக்கைகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கான நீடித்த எரிசக்தி ஆதாரங்களை உறுதி செய்யும் முயற்சியில் இதுவும் ஒரு பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் உள்ளார்ந்த எண்ணெய், எரிவாயு உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதோடு இறக்குமதியைக் குறைப்பதற்கும் இத்திட்டம் உதவும்.
அதே வேளையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சின் பசுமை ஒப்புதல் பெற்றுள்ள இந்தத் திட்டம் குறித்து, எதிர்காலத்தில் முழுமையான பணிகள், சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில், கன்னியாகுமரி அருகில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க அளித்திருக்கும் அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆழ்கடல் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டங்களால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் என்று வல்லுனர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.
ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீன் வளம் பாதிக்கப்படும் என்று மீனவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது நியாயமல்ல.
கடல் வளத்தைக் கெடுக்கும் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.