மும்பை: இந்தியாவில் அண்மையில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளன.
கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் ஏன் பாலியல் வன்முறைகளைக் குறைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
புதுடெல்லியில் இந்த வாரம் பெண் ஒருவரை மூன்று ஆடவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதைக் கண்டிக்கும் வகையில் செப்டம்பர் 23ஆம் தேதி நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் வீதிகளில் முழக்கங்களை எழுப்பினர்.
2012ஆம் ஆண்டு நடந்த டெல்லி நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.
குற்றங்களுக்கான வரையறைகள் விரிவாக்கப்பட்டு, கடுமையான தண்டனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு குறைந்தது 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தொடர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் சேர்க்கப்பட்டன. எனினும், இந்தச் சட்டங்கள் போதாது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மக்களிடையே மனமாற்றம் ஏற்படுவதே இதற்கு உண்மையான தீர்வு எனப் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர் யோகிதா பயானா தெரிவித்தார்.
அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்களின்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக 80 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2012ஆம் ஆண்டில் 68ஆக இருந்தது.
சமூக அவப்பெயருக்கு அஞ்சிப் பலரும் புகாரளிப்பதில்லை. எனவே, உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கலாம் எனக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் 16 வயது சிறுமி கொல்லப்பட்டதும், பேருந்து ஓட்டுநரால் 17 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதும் அண்மையில் நடந்துள்ளன.
பீகார் மாநிலத்திலும் ஒரு பதின்வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான காணொளி வெளியாகியுள்ளது.
சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால் இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். காவலர்களுக்கும் நீதிபதிகளுக்கும் அதிகப் பணிச்சுமை உள்ளது.
பாலியல் குற்றங்களுக்கான தண்டனை விகிதம் கால் பங்கு அளவிலேயே உள்ளது. நீதிமன்றங்களில் உள்ள 200,000க்கும் மேற்பட்ட வழக்குகளில் 10 விழுக்காட்டுக்கும் குறைவானவையே முடிந்துள்ளன.
ஒரு வழக்கு முடிய 7 முதல் 8 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதான பயம் குறைந்துவிடுகிறது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
