சென்னைக்கு சிறப்பு ரயிலில் வெங்காயம்: இந்திய அமைச்சு நடவடிக்கை

சென்னைக்கு சிறப்பு ரயிலில் வெங்காயம்: இந்திய அமைச்சு நடவடிக்கை

1 mins read
916e1cfa-f185-4e14-a843-b1f0152c57a8
மகாராஷ்டிராவின் மன்மாட் பகுதியில் இதற்கான ஏற்றுமதிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - கோப்புப் படம்: தி இந்து
Google News Preferred Icon

புதுடெல்லி: கடந்த சில நாள்களாகச் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்துவரும் நிலையில், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை கிலோ ரூ.50 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் மூலம் வெங்காயத்தை விநியோகிக்கும் பணியை இந்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இரு நாள்களுக்கு முன்பு ‘கண்டா’ எனப்படும் சிறப்புச் சரக்கு ரயில்கள் மூலம் டெல்லிக்கு 500 டன் வெங்காயம் அனுப்பப்பட்டது.

அதையடுத்து, சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) சென்னைக்கு 840 டன் வெங்காயத்தை அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மகாராஷ்டிராவின் மன்மாட் பகுதியில் இதற்கான ஏற்றுமதிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருவமழைத் தாமதம், குறைந்த மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, சென்னை, டெல்லி, கேரளா, அசாம் போன்ற இடங்களில் வெங்காய விலை அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த, சாலை, ரயில்வழிப் போக்குவரத்துகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மேலும், விற்பனை நிலையங்கள் வழியாக, ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற மானிய விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

இந்திய அரசின் இத்தொடர் நடவடிக்கையால், மிகப்பெரிய வெங்காயச் சந்தையான லாசல்கான் பகுதியில் மொத்த விற்பனை விலை 10 விழுக்காடு வரை குறைந்துள்ளது. மதுரை, எர்ணாகுளம் போன்ற நகரங்களுக்கும் விரைவில் ரயில் மூலம் வெங்காயம் அனுப்பப்படும் எனப் பயனீட்டாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்