புதுடெல்லி: இவ்வாரத் தொடக்கத்தில் ஜிஎஸ்டி (சரக்கு, சேவை வரி) குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் இணையம் வழியாக மேற்கொள்ளப்படும் பண்டிகைக் கால விற்பனை அதிகரித்து வருகிறது.
இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், அதன் விழாக்கால விற்பனையின் முதல் இரண்டு நாள்களில் 380 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் வருகையைப் பதிவு செய்துள்ளது.
இது அதன் மிகப்பெரிய பருவகால தொடக்கத்தைக் குறிக்கிறது.
எழுபது விழுக்காட்டுக்கும் அதிகமான ஆர்டர்கள் பெருநகரங்களுக்கு வெளியே இருந்து அந்நிறுவனத்துக்குச் செல்கின்றன.
பெருநகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு வர்த்தகம் பெருகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22ஆம் தேதி அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள், பெரிய திரை தொலைக்காட்சிப் பெட்டிகள், நடுத்தர அளவிலான ஆடை-அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட அதிகத் தேவையுள்ள பிரபலமான பிரிவுகளில் வரி குறைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நேரடிப் பயனை அளித்துள்ளன.
சந்தை ஆய்வு நிறுவனமான ரெட்சீா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிய திரை தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான ஜிஎஸ்டி 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைந்ததால், அவற்றின் சில்லறை விலைகள் எட்டு விழுக்காடு வரை குறைக்கப்பட்டன.
ஜிஎஸ்டி வரிக் குறைப்பு அமலுக்கு வந்த முதல் இரு நாள்களில் மட்டும் இணையம் மூலம் நடைபெறும் விற்பனை 23 முதல் 25 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது கடந்த ஆண்டு மந்தமாகத் தொடங்கிய பண்டிகைக் காலத்தில் நடைபெற்ற விற்பனையைக் காட்டிலும் ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகம்.