பல மாநில மக்களிடம் மோசடி செய்த இணையக் குற்றக் கும்பல் சிக்கியது

1 mins read
018741d2-2574-4385-9849-66159b7fcf34
ஒடிசாவில் கைது செய்யப்பட்ட 12 பேரும் பீகார், கேரளா, ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது. - படம்: தி இந்து

புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள ஒரு வீட்டில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இணையக் குற்றவாளிகள் 12 பேர் பிடிபட்டனர்.

அவர்களில் ஏழு பேர் பீகார் மாநிலத்தையும் நால்வர் கேரளாவையும் ஒருவர் ஒடிசாவையும் சேர்ந்தவர்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (ஜனவரி 12) செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒடிசாவில் படகாடா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு வீட்டில் இணையக் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) அந்த வீட்டைக் காவல்துறையினர் சுற்றி வளைத்ததாக அவர் தெரிவித்தார்.

“பிடிபட்ட 12 பேரிடமும் ரொக்கப் பணம், இணையத் தொடர்பற்ற பழைய 30 கைப்பேசிகள், 30 திறன்பேசிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. ரொக்கப் பணம் எவ்வளவு என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை,” என்று காவல்துறை ஆணையர் எஸ். தேவ் தத்தாசிங் கூறினார்.

இரண்டு மடிக்கணினிகளுடன் சில கடிதங்களும் அந்தக் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தக் கும்பல் புவனேஸ்வர் நகரில் பெரிய அளவிலான இணையக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காவல்துறை துணை ஆணையர் ஜக்மோகன் மீனா கூறினார்.

பரிசுப் பற்றுச்சீட்டுகள், லாட்டரிச் சீட்டுகள், கடன்கள் ஆகிய மூன்று வழிகளில் பொதுமக்களை இணையம் வாயிலாக மோசடி செய்து பணம் பறிக்கும் செயலில் அந்தக் கும்பல் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கும்பல் விரித்த வலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிக்கிப் பணத்தை இழந்ததாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்