சென்னை: இணையத்தில் பணம் கட்டி விளையாட 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்குத் தமிழ்நாடு இணைய விளையாட்டு ஆணையம் தடைவிதித்துள்ளது.
தமிழ்நாட்டு இளையர்களிடையே இணையச் சூதாட்ட மோகம் அதிகரித்து வருகிறது. அத்தகைய விளையாட்டுகளில் பணத்தை இழந்த பலர் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன.
இதனையடுத்து, இணைய விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இணைய விளையாட்டுத் தொடர்பான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பதிவுசெய்வதற்கும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி நசிமுதீன் தலைமையில் தமிழ்நாடு இணைய விளையாட்டு ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இணையத்தில் பணம் கட்டி விளையாடுவதற்கு ஆணையம் தடைவிதித்துள்ளது.
மேலும், நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணிவரை இணைய விளையாட்டுகளில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், இணையத்தில் விளையாடுவோர் குறித்த விவரங்களை ‘கேஒய்சி’ எனப்படும் வாடிக்கையாளர் விவரப் படிவத்தின்மூலம் பெற்று, நிறுவனங்கள் அறிந்துவைத்திருக்க வேண்டும்.
பணம் கட்டி விளையாடும் இணைய விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் மறைச்சொல் (ஓடிபி) மூலம் பயனர்களை விளையாட அனுமதிக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
‘இணைய விளையாட்டு போதை தரும் இயல்புடையது’ என்பது போன்ற எச்சரிக்கை வாசகம் இணைய விளையாட்டுச் செயலியில் இடம்பெற வேண்டும். இணையத்தில் விளையாடுவோர்க்கு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும்.
மேலும், பயனர் ஒருவர் இணைய விளையாட்டில் ஒரு நாளைக்கு, வாரத்திற்கு, மாதத்திற்கு எவ்வளவு பணம் செலவிடுகிறார் என்ற விவரத்தை அவருக்கு இணைய விளையாட்டு நிறுவனம் தெரியப்படுத்த வேண்டும்.
கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் புதிய ஒழுங்குமுறைக் கட்டமைப்பு அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.