பெங்களூரு: இணையவழி சூதாட்டம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வீரேந்திராவுக்குச் சொந்தமான 40 கிலோ தங்கக்கட்டிகளை அமலாக்கத்துறை வியாழக்கிழமை (அக்டோபர் 9) பறிமுதல் செய்தது.
அதன் சந்தை மதிப்பு ரூ.50 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் வீரேந்திரா, 50, ஏற்கெனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் சித்ரதுர்கா தொகுதி எம்எல்ஏவான வீரேந்திரா பல்வேறு சூதாட்ட இணையத்தளங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்தன.
மேலும், சில மாநிலங்களில் வீரேந்திரா சூதாட்ட விடுதிகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சந்தேகத்துக்குரிய சில விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போதும் ரொக்கப்பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு ஏறக்குறைய ரூ.2,000 கோடிக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார்கள் எழுந்ததையடுத்து, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. பின்னர் ஆளுங்கட்சி எம்எல்ஏவான அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சல்லகெரே என்ற பகுதியில் வீரேந்திராவுடன் தொடர்புள்ள இடங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது இரண்டு பாதுகாப்புப் பெட்டகங்களில் ரூ.50 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்கெனவே வீரேந்திராவுக்கு சொந்தமானவை எனக் கருதப்படும் 21 கிலோ தங்கக் கட்டிகள், வெள்ளி நகைகள் என 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, வீரேந்திராவை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.