புதுடெல்லி: இணையச் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி அனுப்பப்பட்ட பொதுநல மனுவுக்குப் பதிலளிக்குமாறு அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இணையச் சூதாட்டங்களின் காரணமாக இளையர்களின் வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. அதனால் அவற்றைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் அந்த மனு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஏ கே பால், ‘‘இணையச் சூதாட்டச் செயலிகள் காரணமாக இந்தியாவில் 300 மில்லியன் இளையர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர். நாளுக்கு நாள் இத்தகைய சூதாட்டங்களால் உயிரை மாய்த்துக்கொள்ளும் போக்கும் அதிகரித்து வருகிறது. இணையச் சூதாட்டச் செயலி விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடக்கூடாது; அவற்றில் நடிக்கப் பிரபலங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்,’‘ என்று வலியுறுத்தினார்.
அதன் பிறகு, மனுவுக்கு மாநில அரசாங்கங்களும் சூதாட்டச் செயலி நிறுவனங்களும் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணை பின்னொரு தேதிக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.