தடை செய்யப்பட்ட பொருள்களை இணையம்வழி விற்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தடை செய்யப்பட்ட பொருள்களை இணையம்வழி விற்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோப்புப் படம்: என்டிடிவி

24 Sep 2026 - 6:01 pm

1 mins read

புதுடில்லி: இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை, விதிமீறல்கள் தொடர்பாக ஐந்து வர்த்தக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கையைத் துவங்கி உள்ளது.

இணையம் வழி உணவுப்பொருள்கள் விற்கும் முன்னணி நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளன.

தவறான விளம்பரங்களை வெளியிட்டு, நுகர்வோரைத் திசைதிருப்பி, தடைசெய்யப்பட்ட உணவுப் பொருள்களை இணையம் வழியாக விற்பனை செய்ததற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, அந்த ஆணையம் அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக் பாஸ்கெட், ஃபிளிப்கார்ட், செப்டோ ஆகிய ஐந்து நிறுவனங்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

உணவு பாதுகாப்புச் சட்டம் 2006, உணவுப் பொருள்களின் தரம், அவை தொடர்பான விளம்பரங்களை ஒழுங்குபடுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளதாக அந்த ஆணையம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஒரு நிறுவனத்தின் குழந்தைகளுக்கான உணவில் ‘பயோட்டின்’ அளவு குறைவாக இருந்ததாகவும் பிற ஊட்டச்சத்துப் பொருள்கள் விதிகளை மீறி விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் கூறி, அதன் மீது உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் மூன்று தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இணையவழி நிறுவனங்களின் மீதான இந்த அதிரடி நடவடிக்கை, மின்-வணிகத் துறையில் நுகர்வோர் பாதுகாப்பு, உணவுத் தரக் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
அமேசான்உணவுப்பொருள்பாதுகாப்புஆணையம்