சென்னை: தமிழ்நாடு இணையக் குற்றங்களை விசாரிக்கும் பிரிவின் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் வியாழக்கிழமை (டிசம்பர் 5) செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், வேலை வாங்கித் தருவதாக இணையம் மூலம் விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களைத் தங்களிடம் அல்லது தங்கள் நாட்டுக்கு வரவழைத்து, அவர்களை இணையக் குற்றச்செயல்களில் ஒரு கும்பல் ஈடுபடுத்துகிறது. இவர்கள் ‘சைபர் அடிமைகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதில் குறிப்பாக இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தகவல் திரட்டு மற்றும் அழைப்பு மையங்கள் போன்ற பணிகளுக்கு அங்கீகாரம் பெறாத மனிதவள முகவைகள் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவர்களைக் கொண்டு இந்தியாவில் இணையக் குற்றங்கள் புரிய அந்த நாட்டு இணையக் குற்றக் கும்பல்கள் பயன்படுத்துகின்றன. இந்த அங்கீகாரம் பெறாத ஆட்சேர்ப்பு முகவைகளுக்கு எதிராக பல புகார்கள் உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
இதுபோன்ற மோசடிகளில் யாரும் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்கும்படி தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. அத்துடன், இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் அல்லது சந்தேகத்துக்கிடமான செயல் தென்பட்டால், இணையக் குற்றப் பிரிவின் நேரடித் தொலைபேசி எண் 1930ஐ அழைத்து அதில் புகார் தெரிவிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையத்தளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.