இந்திய எம்பி, எம்எல்ஏக்களில் 10% மட்டுமே பெண்கள்: ஆய்வறிக்கை

இந்திய எம்பி, எம்எல்ஏக்களில் 10% மட்டுமே பெண்கள்: ஆய்வறிக்கை

2 mins read
65e2403e-9282-4569-ac0c-e35766bf2b3b
இந்திய நாடாளுமன்ற மக்களவை எம்பிக்கள் 543 பேரில் 74 பேர் பெண்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் மொத்தமுள்ள 4,666 எம்பி/எம்எல்ஏக்களில் 464 பேர் மட்டுமே, அதாவது பத்து விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள் என்று ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம் (ஏடிஆர்) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அனைத்துலகப் பெண்கள் நாளை (மார்ச் 8) முன்னிட்டு ‘இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பும் பிரதிநிதிப்பும்’ என்ற அறிக்கையை அவ்வமைப்பு வெளியிட்டது.

அதன்படி, நாடாளுமன்ற மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்பிக்களில் 14 விழுக்காட்டினர், அதாவது 74 பேர் பெண்கள். 22 மாநிலங்களிலும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளிலும் பெண் எம்பிக்கள் உள்ளனர். கேரள மாநிலத்திலிருந்து ஒரு பெண் எம்பிகூட இல்லை.

ஆக அதிகமாக, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 11 பெண்கள் எம்பிக்களாக உள்ளனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா (தலா 7), மத்தியப் பிரதேசம் (6) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில், பாரதிய ஜனதா கட்சி எம்பிக்களில் 31 பேர் பெண்கள். காங்கிரஸ் கட்சியில் 13 பெண்களும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் 11 பெண்களும் எம்பிக்களாக உள்ளனர்.

மொத்தமுள்ள 4,213 எம்எல்ஏக்களில் ஒன்பது விழுக்காட்டினர், அதாவது 390 பேர் பெண்கள். ஆக அதிகமாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 47 பெண்கள் எம்எல்ஏக்களாக உள்ளனர். மேற்கு வங்கம் (40), பீகார் (29), மத்தியப் பிரதேசம் (27) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலைகளில் உள்ளன.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 163 பெண்கள் எம்எல்ஏக்களாக உள்ளனர். காங்கிரசும் (59) திரிணாமூல் காங்கிரசும் (34) அடுத்த இரு நிலைகளில் உள்ளன.

ஏடிஆர் அமைப்பும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் (என்இடபிள்யூ) இணைந்து மேற்கொண்ட பகுப்பாய்வுமூலம் இவ்விவரங்கள் தெரியவந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்