புதுடெல்லி: இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை ஒழுங்குபடுத்துவதற்கான ஆவணமாக மட்டுமே கடப்பிதழைக் கருத வேண்டும் என்றும் இந்தியாவில் எட்டு விழுக்காட்டினரிடம் மட்டுமே கடப்பிதழ் உள்ளது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடப்பிதழ் என்பது குடியுரிமைக்கான சான்றா என்று அண்மையில் சர்ச்சை எழுந்தது.
கடப்பிதழ் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும் அதைக் குடியுரிமைக்கான சான்றாகக் கருதக்கூடாது என்றும் கடந்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.
பல இந்திய மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தால், ‘வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை’ (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடப்பிதழை குடியுரிமைக்கான சான்றாகப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த கேள்விக்கும் மேலும் சில ஐயங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் வெளியுறவு அமைச்சு தனது விளக்கத்தை அளித்தது.
அதன்படி, இந்தியக் குடிமக்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதை ஒழுங்குபடுத்துவதற்காக வழங்கப்படும் ஒரு பயண ஆவணம்தான் கடப்பிதழ் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கடப்பிதழ் என்பது கடந்த 1967ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டத்தின்படி வழங்கப்படும் ஓர் ஆவணம் என்றும் பல்வேறு ‘சரிபார்ப்பு’ நடவடிக்கைகளுக்குப் பிறகே அது வழங்கப்படுகிறது என்றும் திரு ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
தற்போது எட்டு விழுக்காட்டிற்கும் குறைவான இந்தியர்களே கடப்பிதழ் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியக் குடிமக்களுக்கு கடப்பிதழ்கள் வழங்கப்பட்டாலும், அந்தச் சிறிய ஆவணத்தின் முதன்மை நோக்கம், அனைத்துலகப் பயணத்தை மேற்கொள்வதற்கும் வெளிநாட்டில் அடையாளத்தை உறுதிசெய்வதற்கும் உதவுவதுதான் என்பது வெளியுறவு அமைச்சின் அண்மை விளக்கம்.
குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கடப்பிதழ் வழங்கப்படலாம் என 1967 கடப்பிதழ் சட்டம் தெரிவிக்கிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில், கடப்பிதழ் வைத்திருப்பது மட்டுமே குடியுரிமைக்கான ‘முடிவான’ அல்லது ‘நிச்சயமான’ சான்றாகக் கருதப்பட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

