டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களில் இனிமேல் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எழில்கொஞ்சும் இமயமலையில் அமைந்துள்ள தொன்மையான அந்த இரு இந்துக்கோயில்களுக்குப் பல்லாயிரக்கணக்கானோர் யாத்திரை போவது வழக்கம்.
பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இந்து அல்லாதவர்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல நூற்றாண்டுகள் பழமையான பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களின் சுற்றுப் பகுதிகளில் உள்ள 45 கோயில்கள் இக்குழுமத்தின் கீழ் உள்ளன.
இதுதொடர்பான தீர்மானம் கோயில் குழுமத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வரவுள்ளது என்று கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் ஹேமந்த் திரிவேதி கூறினார்.
சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்றும் மாநில அரசின் நடவடிக்கையைப் பாராட்டிய திரிவேதி, அது உத்தரகண்ட்டின் மத அடையாளம், பண்டாட்டுப் பாரம்பரியம், சட்ட ஒழுங்கை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கை என்றார்.
உத்தரகாண்ட் கோயில்களின் புனிதத்தன்மையையும் பாரம்பரியத்தையும் இது பாதுகாக்க உதவும் என்றும் அவர் கூறினார். இந்த அறிவிப்பைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளன.
மக்களைக் குழப்பவும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பவுமே பாஜக அரசு இதைச் செய்கிறது என்று காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சூர்யகாந்த் தாஸ்மானா சாடியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்துக்கள் அல்லாதோர் இக்கோயில்களுக்கு வருவதில்லை. எனவே, இதுபோன்ற தடை அவசியமில்லை,” என்றார் அவர்.
இந்துக்கள் மேற்கொள்ளும் புனிதப் பயணங்களில் முக்கியமானது, இமயமலையில் அமைந்துள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் பத்ரிநாத் ஆகிய நான்கு புனிதத் தலங்களைத் தரிசிக்கும் சோட்டா சார் தாம் யாத்திரையே. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பக்தர்கள் இந்தப் புனித யாத்திரைக்குச் செல்கிறார்கள்.
குளிர் காலத்துக்காக மூடப்பட்டுள்ள பத்ரிநாத் கோயில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். கேதார்நாத் கோயில் திறக்கப்படும் தேதி சிவராத்திரி அன்று அறிவிக்கப்படும்.
இந்த இரு முக்கிய திருத்தலங்கள் குறித்து தமிழ் பாசுரங்கள் பாடப்பட்டுள்ளன.
திருவதரி என்று அழைக்கப்படும் பத்ரிநாதர் கோயில் வைணவத் திருத்தலங்களில் ஒன்று. அதனைப் பற்றிய திவ்யப் பிரபந்தப் பாடல்கள் தமிழில் உள்ளன. 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சைவத் திருத்தலமாகிய கேதாரம், பன்னிரு ஜோதிலிங்கக் கோயில்களில் முக்கிய இடம்பெற்றுள்ளது. அதனை திருஞானசம்பந்தர் அவரது தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

