ஆந்திரா: திருப்பதியில் இந்து அல்லாத அனைத்து ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய தேவஸ்தான நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த வாரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி பயணத்தின்போது திருமலை தேவஸ்தானத்தில் இனி இந்துக்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவித்த நிலையில் தேவஸ்தான நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
திருப்பதியில் பக்தர்களுக்கு உதவுவதற்கும் கோவிலின் நிர்வாக பணிகளை மேற்கொள்ளவும் தேவஸ்தானம் சார்பில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த வாரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அங்கு தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறக்கட்டளை வாரியம், இந்து அல்லாத அனைத்து ஊழியர்களையும் நீக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
தேவஸ்தான வாரியக் கூட்டத்திற்குப் பிறகு, TTD தலைவர் பி.ஆர். நாயுடு இந்த முடிவை அறிவித்துள்ளார். இந்து நம்பிக்கையைப் பின்பற்றும் தனிநபர்கள் மட்டுமே கோயிலின் புனிதக் கடமைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தத் தீர்மானம் பக்தர்களின் ஆன்மீக மற்றும் மத உணர்வுகளுடன் ஒத்துப்போகிறது என்றும் அவர்கள் கோயில் நிர்வாகம் இந்துமத நம்பிக்கை பின்பற்றுபவர்களால் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் 2025-26 நிதியாண்டிற்கான TTD பட்ஜெட்டிற்கும் வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி மொத்தம் 5,258.68 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்துக்கள் அல்லாத ஊழியர்களை நீக்கும் முடிவோடு, TTD சொத்துகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்புக் குழுவை அமைப்பதற்கும் வாரியம் ஒப்புதல் அளித்தது.