உதய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூர் நகரம், ‘கோண்டே நாஸ்ட் டிராவலர்’ (Conde Nast Traveller) சஞ்சிகையில் ‘2026ஆம் ஆண்டில் சென்று பார்க்கவேண்டிய மிகச்சிறந்த இடங்கள்’ பட்டியலில் ஒரேயோர் இந்திய நகராக இடம்பெற்றுள்ளது.
கரீபிய நாடான பார்பேடாசின் கிழக்குக் கடற்கரை, பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ், ஹாங்காங் உள்ளிட்டவற்றின் இதர சுற்றுலாத் தலங்கள் இவ்வாண்டுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ராஜஸ்தானின் 16ஆம் நூற்றாண்டு ‘ஏரி நகர்’ எனப்படும் உதய்ப்பூரின் அரண்மனைகளும் கம்பீரமான மாளிகைகளும் எப்போதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருவதாக அந்தச் சஞ்சிகை தனது அறிக்கையில் கூறியது.
இப்போது பல ஆடம்பர ஹோட்டல்கள் திறக்கப்படுவது, உதய்ப்பூருக்கு ஒரு வரவேற்கத்தக்க புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அது சொன்னது. தாஜ், ஓபராய், லீலா குழுமங்கள் போன்ற இந்திய ஹோட்டல் துறை அடையாளங்களுடன் அனைத்துலக ஹோட்டல்களும் களமிறங்கியுள்ளன.
“மகாராணா சஜ்ஜன் சிங்கின் முன்னாள் வேட்டை ஓய்வு இல்லமான 19ஆம் நூற்றாண்டின் மான்சூன் அரண்மனையைச் சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் ‘ஃபேர்மான்ட் உதய்ப்பூர் பேலஸ்’, பிச்வாய் கலை, நுட்பமான சத்ரிகள், ராஜபுத்திரர் கால வடிவமைப்புகளின் குறிப்புகளால் நிரப்பப்பட்ட ஒரு மாளிகை போன்ற 327 அறைகளைக் கொண்ட தங்குவிடுதியாகும்,” என்று சஞ்சிகை குறிப்பிட்டது.

