புதுடெல்லி: அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவனை’ அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
கடந்த 47 ஆண்டுகளாக எண் 24, அக்பர் சாலை வளாகத்தில் இருந்து செயல்பட்டு வந்த இந்தியாவின் பழைமையான கட்சியாகிய காங்கிரசின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, புதுடெல்லியின் 9A, கோட்லா சாலையில் புதிய தலைமையகத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது.
மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் நினைவாக ‘இந்திரா பவன்’ என இந்தத் தலைமையகத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய கீதம் இசைக்க, வந்தே மாதரம் என்று முழங்கியபடி கட்சியின் புதிய தலைமையகம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து திறந்து வைக்கப்பட்டது.
புதிய தலைமையகம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவன்’ ஜனநாயகம், தேசியவாதம், மதச்சார்பின்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்திய தேசிய காங்கிரசின் 140 ஆண்டுகால வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக இங்குள்ள சுவர்கள் உண்மை, அகிம்சை, தியாகம், போராட்டம் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றின் உண்மையை வெளிக்கொணர்வதாக உள்ளன,” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமையகம் குறித்துப் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், “காலத்துடன் ஒத்துப்போகும் வகையில் புதியதைத் தழுவுவதற்கான நேரம் இது,” என்று கூறியுள்ளார்.

