புதுடெல்லி: சீனாவின் ஷாங்காய் பகுதியில் புதிதாக அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது அங்குள்ள இந்திய துணைத் தூதரகம்.
இதன் மூலம் இரு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என நம்புவதாக துணைத் தூதர் பிரத்திக் மாத்தூர் தெரிவித்தார்.
இந்தியா, ஷாங்காய் இடையே புதிய நேரடி விமானச்சேவை தொடங்கப்பட்டது உள்ளிட்ட அண்மைய முயற்சிகள் இருதரப்பு பரிமாற்றங்களை அதிகரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், புதிய அலுவலகம் மேம்படுத்தப்பட்ட சேவையை குறித்த நேரத்தில் வழங்குகிறது என்றார்.
இரு நாடுகளுக்கு இடையே பொருளியல், மக்கள் தொடர்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான அடையாளமாக, புதிய துணைத் தூதரகக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஷாங்காயில் கடந்த 32 ஆண்டுகளில் இந்தியத் தூதரகம் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
அலுவலகத் திறப்பு நிகழ்வில் சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத் உட்பட 30 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், இந்திய சமூக உறுப்பினர்கள் 500 பேரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஷாங்காயின் சாங்னிங் மாவட்டத்தில் அமைந்துள்ள புதிய அலுவலகம், பெரியதாகவும் நவீனமாகவும் உள்ளது என்றும் சேவைகளை மேம்படுத்தவும் வட்டாரத்தில் இந்தியாவின் ஈடுபாட்டை வலுப்படுத்தவும் உதவும் என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என்றும் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

