தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆப்பரேஷன் அக்கல்’: காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

2 mins read
71a8ee18-25b2-4507-a851-b3d5b265f7d7
அக்கல் வனப்பகுதியில் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். - படம்: ஏஎன்ஐ

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆப்பரேஷன் அக்கல்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே ராணுவக் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்பரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையின்போது, 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில், பஹல்காம் தாக்குதலில் பங்கேற்றவர்களும் அடங்குவர் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத்தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அக்கல் வனப்பகுதியில் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விடிய விடிய நடந்த இந்த தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் நெருங்கியதை அடுத்து, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு மூண்டது.

இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் அங்கு பதுங்கியிருக்கக்கூடும் என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். எனவே, அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு நீடித்து வருகிறது.

பயங்கரவாதிகள் தப்பித்துச் செல்ல முடியாத வகையில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் இருதரப்புக்கும் இடையே சண்டை நடந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மூன்றாவது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது இந்திய ராணுவம். ஏற்கெனவே பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளைத் தடுத்து நிறுத்த ‘ஆப்பரேஷன் சிவசக்தி’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஜூலை 28ஆம் தேதி ‘ஆப்பரேஷன் மகாதேவ்’ மூலம் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்