தேடப்படும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ‘உலகளாவிய வேட்டை’ நடவடிக்கை

தேடப்படும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ‘உலகளாவிய வேட்டை’ நடவடிக்கை

படம்: மிலெனியம் போஸ்ட்

02 May 2026 - 4:12 pm

1 mins read

புதுடெல்லி: வெளிநாடுகளில் பதுங்கியுள்ள, இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகள் சிலரைத் தேடிப் பிடித்துக் கைதுசெய்ய, ‘இன்டர்போல்’ எனப்படும் அனைத்துலகக் காவல்துறையுடன் இணைந்து இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அந்த நடவடிக்கைக்கு ‘உலகளாவிய வேட்டை’ (குளோபல் ஹன்ட்) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ள 11 குற்றவாளிகளும் அனைத்துலகப் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், ஒருங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட பலர், வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், பிரபலப் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சலீம் டோலா துருக்கியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

அதேபோல் மற்ற நாடுகளில் உள்ள குற்றவாளிகளையும் இந்தியாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை இந்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அதற்காக ‘இன்டர்போல்’ அமைப்புடன் இணைந்து செயல்பட இந்தியா திட்டமிட்டுள்ளது.

‘ஆபரேஷன் குளோபல் ஹன்ட்’ எனப் பெயரிடப்பட்ட நடவடிக்கையின் மூலம், அனைத்துலகக் காவல்துறை அமைப்புடன் இணைந்து செயல்படுமாறும் உலகம் முழுவதும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்திய அரசு பல்வேறு இந்திய முகமைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆசிஃப் இக்பால் மெமன், ஹஸ்ரா, ஜுனைத், ஹர்மீத், பிரதீப் சிங், பரம்ஜித் தலிவால், சன்னி கோசல்விஸ், ஜஸ்விந்தர் சிங், தைஷான் பிஷ்னோய், ஹாலி சலீம், சந்தீப் துனியா ஆகியோரை முதற்கட்டமாக இந்தியாவுக்கு நாடுகடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் ஜஸ்விந்தர் சிங், சன்னி கோசல்விஸ் ஆகியோர் தற்போது துபாய் காவல்துறையின் பிடியில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்