சென்னை: பொங்கல் பண்டிகை, குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு பகுதிகள் காவல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘ஆப்பரேஷன் ஜான் ஜாக்ரன்’ என்ற நடவடிக்கையின் பேரில் விரைவு ரயில்கள் கண்காணிக்கப்படுகின்றன.
ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய, ஆபத்தான பொருள்கள் கொண்டு வரப்படுகின்றனவா என்று தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்கள், புறப்பட்ட ரயில்களில் ரயில்வே காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும் இந்த நடவடிக்கை குடியரசு தினம் வரை நீடிக்கும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த சென்னையில் உள்ள 82 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் லட்சகணக்கான பயணிகளுக்கு நாள்தோறும் பாதுகாப்பான, நம்பகமான பயணச்சூழலை வழங்க முடியும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்தது.
“கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் பணி தொடர்ந்து நடைபெறும், பயணிகள் எங்கு ஏறி, இறங்கினாலும் அவர்கள் பாதுகாப்பாக உணர்வதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும்,” என சென்னை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

