தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆப்பரேஷன் மகாதேவ்’: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

2 mins read
7c133bbb-752b-46bf-9e7e-fe2590177a8d
பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து அப்பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். - படம்: ஊடகம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் மகாதேவ்’ அதிரடி நடவடிக்கையின்போது, மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இம்மூவரும் பஹல்காமில் நிகழ்ந்த தாக்குதலின்போது 26 அப்பாவி சுற்றுப்பயணிகளைச் சுட்டுக் கொன்றவர்கள் எனக் கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, அதில் தொடர்புள்ள பயங்கரவாதிகள் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான், இந்திய ராணுவங்களுக்கு இடையே மோதல் வெடித்து, சில நாள்கள் அது நீடித்தது.

பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் பிடிபடவில்லை என இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. எனினும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் எனப் பிரதமர் மோடி திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த பயங்கரவாதிகள் மூன்று பேர் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லிட்வாஸ் பகுதியில் பதுங்கி இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து அப்பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கைக்கு ‘ஆப்பரேஷன் மகாதேவ்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.

தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை நோக்கி, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், அங்கு மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும், இவர்கள் ஸ்ரீநகருக்குள் மீண்டும் எதற்காக ஊடுருவினர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் ஏதுமில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, ‘ஆப்பரேஷன் மகாதேவ்’ நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை எனப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 14 நாள்களாக பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது.

மேலும், இந்த தேடுதல் நடவடிக்கையில் ஆளில்லா வானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஸ்ரீநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்