புதுடெல்லி: ஈரானில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்காக, தனது வான்வெளியைத் திறக்க ஈரான் முன்வந்துள்ளது.
இதையடுத்து, அங்கிருந்து மேலும் 290 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஈரான், இஸ்ரேல் நாடுகளின் இடையே கடந்த சில நாள்களாக கடும் மோதல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் பெரும் உயிருடற் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானில் கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களின் நிலை குறித்து அவர்களின் பெற்றோர் கவலை அடைந்தனர்.
இதையடுத்து, மாணவர்களை மீட்க ‘ஆப்பரேஷன் சிந்து’ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது இந்திய அரசு.
முதற்கட்டமாக, 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஈரானில் இருந்து சாலை மார்க்கமாக அர்மேனியா தலைநகர் எரவான் எல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டனர்.
இதற்கிடையே, ஈரானில் இருந்து மேலும், ஆயிரம் இந்திய மாணவர்கள் நாடுதிரும்ப வசதியாக, ஈரான் அரசு தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஈரான் விமான நிறுவனமான ‘மகான் ஏர்வேஸ்’, மூன்று விமானங்களை இந்திய மாணவர்களுக்கு இயக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஈரான் தனது வான்வெளியைத் திறந்துள்ளது.
இந்நிலையில், போர்ப் பதற்றம் நிறைந்த ஈரானின் மஷாத் நகரிலிருந்து 290 இந்திய மாணவர்களுடன் வந்த விமானம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தரையிறங்கியது.
மேலும், அடுத்தடுத்து இந்திய மாணவர்களுடன் இரண்டு விமானங்கள் ஈரானில் இருந்து டெல்லி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
6,000 தென் மாவட்ட மீனவர்கள்
இந்நிலையில், ஈரானில் உள்ள தென் மாவட்ட மீனவர்கள் 6,000 பேரின் தகவல்களை உடனடியாகச் சேகரிக்க வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியருடன் தாம் கலந்தாலோசித்ததாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் ஈரானில் இருப்பதை அறிந்தவுடன், இந்திய வெளியுறவு அமைச்சிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளேன்.
“இந்திய மீனவர்களைப் பாதுகாப்புடன் மீட்டுக் கொண்டுவர தமிழக பாஜக உறுதியுடன் செயல்படும்,” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதனிடையே, ஈரானில் உள்ள நேப்பாளம், இலங்கை குடிமக்களை மீட்க இந்தியா உதவிக்கரம் நீட்டும் என ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்தது.
இத்தொடர்பாக அவ்விரு நாடுகளும் விடுத்த கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை தெரிவித்தார்.
மேலும், இதுவரை ஈரானிடம் இருந்து 517 இந்தியர்கள் ‘ஆப்பரேஷன் சிந்து’ நடவடிக்கை மூலம் பத்திரமாக நாடு திரும்பியதாகவும் அவர் கூறினார்.