பாட்னா: பீகாரில் காணாமல் போன, கடத்தப்பட்ட, வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளைக் கண்டறிந்து மீட்க மாநிலம் தழுவிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
‘ஆபரேஷன் தலாஷ்’ என்ற பெயரிலான இந்த அதிரடித் தேடுதல் வேட்டையைப் பீகார் மாநிலக் காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பீகார் சிஐடி பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் கே. சுஹிதா அனுபமின் வழிகாட்டுதலில் இத்திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கிய இந்தச் சிறப்புத் திட்டம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இதில் சிறார்களுக்கான சிறப்பு காவல் பிரிவுகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல உதவி மையங்கள், மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகள் உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
அத்துடன், ‘போலிஸ் தீதி’, ‘அபயா பிரிகேட்’ போன்ற பெண் காவலர்களின் சிறப்புப் படைகளும் இதில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 2 வரை 14 நாள்களில் 3,359 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 3,357 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தைகளில் 2,705 பேர் சிறுமிகள் என்றும் 652 பேர் சிறுவர்கள் என்றும் பீகார் மாநிலக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த 14 நாள்களில் ‘மிஷன் வாத்சல்யா’ இணையத்தளத்தில் புதிதாக 2,254 குழந்தைகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
அதில் ஏற்கெனவே இருந்த பதிவுகளுடன் ஒப்பிட்டு 2,787 குழந்தைகளின் விவரங்கள் துல்லியமாகப் பொருந்திப் போனதால் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘மிஷன் வாத்சல்யா’ இணையத்தளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 6,857 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பீகார் காவல்துறை அறிக்கை கூறுகிறது.
இந்தத் தேடுதல் வேட்டைத் திட்டம் சிறுவர் நீதி வாரியங்களின் அனுமதியுடன் குழந்தைகள் காப்பகங்கள், சீர்திருத்தப் பள்ளிகள், சிறார் இல்லங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள குழந்தைகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கி, அவர்களின் குடும்பப் பின்னணியைக் கண்டறிந்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள கடத்தல் வழக்குகளையும் காவல்துறையினர் இந்த ‘ஆபரேஷன் தலாஷ்’ திட்டத்தின்கீழ் தீவிரமாக மறுவிசாரணை செய்து வருகின்றனர்.


