மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: கருத்துக்கணிப்பு

தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மாற்றம்

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: கருத்துக்கணிப்பு

2 mins read
d557e30e-1263-4c47-951b-3ebdc0e1d434
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, வாக்கு விகிதத்தில் மற்றக் கட்சிகளைவிடத் தெளிவான முன்னிலையில் இருக்கும் என்று கருத்துக்கணிப்புத் தெரிவித்துள்ளது. - படம்: ஃப்ரீ பிரஸ் ஜர்னல்

கோல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அம்மாநில நிர்வாகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலா நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை செயலாளர் ஜெகதீஷ் பிரசாத் மீனா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சங்கமித்ரா கோஷை உள்துறை மற்றும் மலை விவகாரங்கள் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்குமாறும் ஆணையம் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பதவி மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தவொரு பணியிலும் அமர்த்தப்படக் கூடாது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்ரல் 23ஆம் தேதியும் மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதியும் என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

2% வாக்குகளே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும்

அங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவும் என்று மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் (Matrize-IANS) அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, வாக்கு விகிதத்தில் மற்றக் கட்சிகளைவிடத் தெளிவான முன்னிலையில் இருக்கும். எனினும், பாஜக கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று ஏபிபி நியூஸ் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியின் செல்வாக்கும் எதிர்க்கட்சியின் எழுச்சியும் தேர்தலை சூடுபிடிக்கச் செய்துள்ளன.

மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 155-170 இடங்களிலும் பாஜக கூட்டணி 100-115 இடங்களிலும் மற்றக் கட்சிகள் 5-7 இடங்களிலும் வெற்றி பெறும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

திரிணாமூல் கட்சி 43-45% வாக்குகள், பாஜக கூட்டணி 41-43% வாக்குகள் மற்றக் கட்சிகள் 13-15% வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2% வாக்குகளே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் என்பதால் வாக்குப்பதிவு வரையிலும்கூட அங்கு போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.

பல தொகுதிகளில் பாஜக தனது இருப்பைத் தக்க வைத்துள்ளதால், கடந்த தேர்தல்களைவிட இந்த முறை மம்தாவுக்கு சவால் அதிகமாகவே இருக்கும்.

கடந்த 2021 தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் 290 தொகுதிகளில் போட்டியிட்டு 215 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 77 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணியில் ஐஎஸ்எஃப் என்ற கட்சி மட்டுமே ஒரு இடத்தில் வென்றது.

குறிப்புச் சொற்கள்