புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருப்பது இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாகவே, மக்களவைக்கு வரவேண்டாம் எனப் பிரதமரை தாம் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை (பிப்ரவரி 5) நாடாளுமன்ற மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து முழுக்கங்களை எழுப்பினர்.
அதிபரின் உரை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சில கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால் ஆவேசமடைந்த காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
எனினும், மீண்டும் அவை கூடியபோதும் அமளி குறைந்தபாடில்லை. இதனால் அன்றைய நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அவைக்கு வரவில்லை. இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், அச்சம் காரணமாக பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை என ராகுல் காந்தி விமர்சித்தார்.
பிரதமர் மோடி வராததால் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக அதிபரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமரின் பதில் உரை இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையில் சில உறுப்பினர்களின் நடவடிக்கைகள், முன் எப்போதும் இல்லாத அளவு வித்தியாசமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சில உறுப்பினர்களின் நடவடிக்கை மோசமாக இருந்தது என்றும் சபாநாயகர் அலுவலகத்தில் சில எம்பிக்களின் நடவடிக்கைகள் கவலையளிக்கும் வகையில் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை ஒத்துமொத்த நாடே பார்ப்பதாகவும் பிரதமரின் இருக்கையை நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எப்படிச் சென்றார்கள் என்பதை மற்ற நாட்டு மக்கள் பார்த்துள்ளனர் என்றும் திரு ஓம் பிர்லா தெரிவித்தார்.
பிரதமர் மீது தாக்குதல் நடக்கக்கூடும் என்ற தகவல் தமக்கு கிடைத்ததாக குறிப்பிட்ட அவர், அத்தகைய சூழல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே பிரதமரை மக்களவைக்கு வரவேண்டாம் எனத் தாம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.
பிரதமர் மோடியும் தாம் சொன்னதை ஏற்றுக்கொண்டு அவைக்கு வராமல், விரும்பத்தகாத நிகழ்வு நடப்பதைத் தடுத்துவிட்டார் என்றார் திரு ஓம் பிர்லா.
இதனிடையே, சபாநாயகரின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பிரதமரைத் தாக்க காங்கிரஸ் எம்பிக்கள் சதி செய்யவில்லை என்று அக்கட்சியின் எம்பி பிரியங்கா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன்பு மூன்று பெண் உறுப்பினர்கள் நின்று கொண்டிருந்ததால் அவைக்கு வரும் துணிச்சல் அவருக்கு இல்லை என்றும் பிரதமர் விரும்பாததால்தான் அவையில் விவாதம் ஏதும் நடத்தப்படவில்லை என்றும் பிரியங்கா மேலும் கூறினார்.

