புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வாக்குக் களவாடல் குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் முறையிட நேரம் கோரிய இண்டியா கூட்டணித் தலைவர்களைச் சந்திக்க, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்துவிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சிவசேனா (யுபிடி) எம்.பி. சஞ்சய் ராவத், திமுக முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் தலைமை நீதிபதியை விமர்சித்துள்ளனர்.
அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தலைமை நீதிபதி தங்களைச் சந்திக்க மறுப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும், இந்த முடிவை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து சிவசேனா (யுபிடி) எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம், வாக்குக் களவாடல் குறித்துத் தலைமை நீதிபதியிடம் முறையிட அனுமதி கோரிய நிலையில், அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தலைமை நீதிபதி தங்களைச் சந்திக்க விரும்பவில்லை என்றார்.
வாக்குத் திருட்டு, தேர்தல் முறைகேடு, லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதன் மூலம் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் திட்டமிட்டபடி போராட்டத்தை முன்னெடுப்போம். கட்சியின் தலைமை என்ன வழிகாட்டுதல் வழங்குகிறதோ, அதை அனைவரும் பின்பற்றுவார்கள்,” என்று காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறியுள்ளார்.
தி.மு.க முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், “தலைமை நீதிபதிக்கு என்ன மாதிரி அழுத்தம் இருக்கிறது எனத் தெரியவில்லை. நாங்கள் அளிப்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மனு. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டால்தான் ஜனநாயகம் தழைக்கும்,” என்றார்.
சு.வெங்கடேசன் கண்டனம்
இதனிடையே, ஜந்தர் மந்தர் பகுதியில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத பாஜக அரசு, போராட்ட இடத்தை அவசரகதியாக மாற்றுவது அதன் அச்சத்தையே வெளிக்காட்டுவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
“அதிகாரத்தில் இருப்பவர்கள் குடிமக்களின் குரலை அவர்கள் எங்கிருந்து எழுப்பினாலும் செவிமடுக்க வேண்டும். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பறித்து, மக்களின் போராட்ட உரிமையை மத்திய அரசு நசுக்கி வருகிறது,” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
