தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதலே நாளே எதிர்க்கட்சிகள் அமளி

2 mins read
001fa262-ba3b-4d04-a439-dcb21c016109
அமைதி காக்கும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்ட பிறகும், கூச்சலும் குழப்பமும் நிலவியது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜூலை 21ஆம் தேதி) தொடங்கியதை அடுத்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.

கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை, காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அவைத்தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என அவை நிரம்பி இருந்தது.

முதலில் காலஞ்சென்ற முன்னாள் மக்களவை உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, இந்தியா பயங்கரவாதத்தை ஒரு துளிகூட ஏற்காது எனக் குறிப்பிட்டார்.

மேலும், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கேள்வி நேரம் தொடங்கியதும், இந்தியா-பாகிஸ்தான் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் கூறிய கருத்துகள் தொடர்பாக பிரதமர் மோடி அவைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

சபாநாயகர் அதை ஏற்க மறுத்து, அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்ட பிறகும், கூச்சலும் குழப்பமும் நிலவியது.

இதையடுத்து, இருமுறை மக்களவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

அதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துகள் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

“’ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது எதிர்க்கட்சிகள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கின. அதேநேரத்தில், போர் நிறுத்தம் ஏற்பட்ட அமெரிக்காவே காரணம் என அதன் அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். போர் நிறுத்தத்துக்கு முன்வராவிட்டால் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என தான் கூறியதை அடுத்தே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் கூறுகிறார்.

“மேலும், ஐந்து ஜெட் விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாகவும் கூறி இருக்கிறார். இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்,” என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்