புதுடெல்லி: எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக ஆகஸ்ட் 12ஆம் தேதியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல எம்பிக்கள், ‘மின்டா தேவி’ எனப் பெயர் பொறிக்கப்பட்ட ‘டி-சட்டை’களை அணிந்திருந்தனர்.
முதல் நாளைப் போன்றே, நேற்றும் சிறப்புத் தீவிர திருத்தத்தை நிறுத்த வலியுறுத்தி, அனைவரும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக முன்பு பொறுப்பில் இருந்த ராஜீவ் குமாரும் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் தேர்தல் ஆணையத்தின் உயிரைப் பறித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.
“இவர்கள் இருவரால் இந்தியாவின் ஜனநாயகச் செயல்முறை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
“‘மின்டா தேவி’ முதல் முறை வாக்காளராகப் பதிவானவர்.
“ஆனால், அவரது வயது 124 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்றார் மாணிக்கம் தாக்கூர்.
தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைத்தால் பாஜக ஏன் பதில் அளிக்கிறது என்று மற்றொரு காங்கிரஸ் எம்பியான கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“எங்கள் முழுக் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தை நோக்கி மட்டுமே இருக்கிறது. அது அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட ஓர் நடுநிலை அமைப்பு. எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறனும் கட்டமைப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு,” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால், எதிர்க்கட்சிகள் தாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் ஏதும் தரவில்லை என்றார். மேலும், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு 30 எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் எதிர்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றன என்றும் அவர் சாடினார்.