கோல்கத்தா: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
கோல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவுக்கு எதிராக இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.
அனைத்து தேசிய கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றும் இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தனக்கு முதல் எதிரி என்றால் அது பாஜகதான் என்றும் இந்த நேரத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கண்ணோட்டத்தில் சிந்திக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி மாணவர் அமைப்புகள், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார் மம்தா.
“காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுல், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் என்னிடம் பேசினர். உத்தவ் தாக்கரே, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தகவல்களை அனுப்பி உள்ளனர். அகிலேஷ் யாதவ் நேரில் வந்து ஆதரவை தெரிவித்தார்.
“மாநில, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்,” என்று முன்னாள் முதல்வரான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

