புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 27 விழுக்காடு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
நாடாளுமன்றத்தின் மகர் துவார் படிக்கட்டுகளில் நின்றவாறு ஏறக்குறைய 50 எம்பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு மோடி அரசுக்கு ஏற்பட்ட களங்கம் என்றும் அவர்கள் விமர்சித்தனர்.
இதேபோல், போலி வாக்காளர் அடையாள அட்டைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பிக்களில் பலரும் வக்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இது குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத், “நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வோம். உங்களிடம் (பாஜக) பெரும்பான்மை உள்ளது என்பதற்காக எங்களது சுதந்திரத்தைப் பறிப்பீர்களா? பெரும்பான்மை என்பது சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்க அல்ல. சமத்துவ உரிமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு,” என்று தெரிவித்தார்.
வக்பு திருத்த மசோதா குறித்துப் பேசிய மதிமுக எம்.பி. வைகோ, “இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மதச்சார்பின்மைக்கும் கூட்டாட்சிக்கும் எதிரானது. நாங்கள் மசோதாவை எதிர்த்தோம். அவர்கள் (பாஜக) பெரும்பான்மை இருப்பதால் மசோதாவை நிறைவேற்றிவிட்டார்கள்,” என தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், “குடியுரிமைச் (திருத்த) சட்டம் தொடர்பாக நாட்டின் முஸ்லிம்களைத் தவறாக வழிநடத்தியவர்கள் இன்று அதையே செய்கிறார்கள். யாரும் தங்கள் குடியுரிமையை இழக்காதது போல, இந்த மசோதா முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மக்கள் காண்பார்கள். கொள்ளையடித்தவர்களுக்கு மட்டுமே (இந்த மசோதாவில்) சிக்கல் உள்ளது,” என்று விமர்சித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது தொடர்பாகப் பேசிய நாடாளுமன்றக் கூட்டுக் குழு தலைவர் ஜக்தம்பிகா பால், “மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் அல்லது ராகுல் காந்தி என யாராக இருந்தாலும், அவர்கள் முஸ்லிம்கள், சிறுபான்மையினரை தங்கள் வாக்கு வங்கியாகக் கருதுகிறார்கள்.
“நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது ஏழை முஸ்லிம்கள், ஓபிசிக்கள், பெண்களுக்கு கிடைத்த வெற்றி. பாஜக அரசு 20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்று அமித் ஷா ஏற்கெனவே கூறியுள்ளார்,” என்று தெரிவித்தார்.