தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்க்கட்சிகள் அமளி: இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

2 mins read
0375439a-e4a1-495d-9fef-9236ad1ce09a
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். - படம்: தமிழ் முரசு

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.

மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கட்கிழமை (ஜூலை 21) தொடங்கியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ உட்பட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. இதற்கு ஆளும் தரப்பு ஒப்புக்கொள்ளாததால் இரு அவைகளும் அடுத்தடுத்து பல முறை ஒத்திவைக்கப்பட்டன. இதனால் நாடாளுமன்றப் பணிகள் ஏறக்குறைய முடங்கின.

இந்நிலையில், இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜூலை 22), இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவகாரம் உட்பட முக்கியப் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின.

குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பின்(அமெரிக்கா) பங்களிப்பு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிபோட்டனர்.

கேள்வி நேரம் தொடர அனுமதிக்குமாறும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஏற்கெனவே உறுதி அளித்தபடி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் ஓம் பிர்லா கூறினார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதன் காரணமாக அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் மாநிலங்களவை கூடியது. அப்போது, முந்தைய கோரிக்கைகளோடு, ஜெகதீப் தன்கர் பதவி விலகல் குறித்தும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்