இந்தியாவிலும் எதிரொலித்தது ஆரக்கல் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கை

இந்தியாவிலும் எதிரொலித்தது ஆரக்கல் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கை

சித்திரிப்புப்படம்: நியூஸ்18

02 Apr 2026 - 7:18 pm

1 mins read

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவுத் துறையில் தனது முதலீடுகளை வேகமாக அதிகரித்து வரும் ஆரக்கல் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 12,000 ஊழியர்களை ஒரே அறிவிப்பின் மூலம் வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ஆரக்கல் ஊழியர்களில் ஏறக்குறைய 30,000 பேருக்கு மேல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆக அதிகமாக, இந்தியாவில் மட்டும் 12,000 பேர் வேலையை இழந்துள்ளனர்.

இந்தியாவில் மட்டும் ஆரக்கல் நிறுவனத்தில் 30,000 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், ஒரே இரவில் ஏறக்குறைய 40 விழுக்காடு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இந்தியா ஆரக்கல் நிறுவனத்தின் இரண்டாவது அதிக ஊழியர்களைக் கொண்ட நாடாகவும், அமெரிக்காவுக்கு வெளியே மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகவும் உள்ளது.

ஆரக்கல் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவுத் துறையில் 360 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இதற்கு ஆண்டுதோறும் 50 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் நிலையில், அந்நிறுவனத்துக்கு ஏற்கெனவே 100 பில்லியன் டாலர் கடன்சுமை உள்ளது. எனவேதான், செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 12,000 பேரை பணிநீக்கம் செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இதுபோன்று மேற்கொண்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் அந்நிறுவனம் 2.1 பில்லியன் டாலர் வரைச் சேமிக்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுவேலைநீக்கம்ஊழியர்கள்