போலிச் செய்திகளை இரண்டு மணி நேரத்தில் கண்டறிந்து பதிலளிக்க மத்திய அமைச்சுகளுக்கு உத்தரவு

போலிச் செய்திகளை இரண்டு மணி நேரத்தில் கண்டறிந்து பதிலளிக்க மத்திய அமைச்சுகளுக்கு உத்தரவு

1 of 2
கோப்புப் படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கோப்புப் படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

29 Jul 2026 - 6:56 pm

2 mins read

புதுடெல்லி: அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்த தவறான தகவல்களை முறியடிக்க அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களும் ‘விரைவுப் பதிலளிப்புக் குழுக்களை’ (கியூஆர்டி) அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் சமூக ஊடகத் தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி உள்ளடக்கங்களை உடனுக்குடன் கண்டறிந்து, அவை வெளியான இரண்டு மணி நேரத்திற்குள் தவறான தகவல்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.

அதற்கேற்ற வகையில் மத்திய அமைச்சுகளும் அரசாங்கத் துறைகளும் விரைவுப் பதிலளிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று தகவல், ஒளிபரப்பு அமைச்சு திங்கட்கிழமை (ஜூலை 28) வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“சமூக ஊடகங்களில் வதந்திகள் மிக வேகமாகப் பரவுகின்றன. பொதுமக்கள் போலி உள்ளடக்கங்களுக்குப் பலியாவதைத் தடுக்க அரசின் பதில்களும் அதே வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டும்,” என்றும் தகவல், ஒளிபரப்பு அமைச்சின் செயலாளர் சஞ்சல் குமார் கடிதம் ஒன்றில் எச்சரித்துள்ளார்.

எல்லா அமைச்சுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதம் தம் கவனத்துக்கு வந்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. தவறாக வழிகாட்டக்கூடிய பதிவு வெளியான இரண்டு மணி நேரத்திற்குள், துல்லியமான உண்மைத் தகவல்களுடன் கூடிய மறுப்புகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

“உண்மைத் தகவலைக் கச்சிதமாக உள்ளடக்கிய அந்த மறுப்புரைகள் 200 சொற்களுக்குள் மட்டுமே இருக்கவேண்டும். இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகத் தளங்களுக்கு ஏற்ப பயனர்களை எளிதில் சென்றடையும் வகையில் ‘மீம்’கள், சுவரொட்டிகள் மற்றும் குறும்படங்களைப் பயன்படுத்த வேண்டும்,” என்றும் அமைச்சுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
பொய்ச் செய்திஅமைச்சுஉத்தரவு