தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி போட உத்தரவு

2 mins read
18175e7e-f5e4-4c34-a10c-58b899fe09b1
பொது இடங்களில் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி போட்டு அழைத்துச் செல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

சென்னை: சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி போட்டு வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

பொது இடத்தில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களைத் தாக்குவதாக பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து மாநகராட்சியின் உத்தரவு வெளியாகியுள்ளது.

வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய வழிகாட்டியையும் அது வெளியிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அச்சம் ஊட்டும் வகையில் ஆக்ரோஷமான நாய்களை வளர்க்கக்கூடாது, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருப்பதும் அவசியமாகிறது.

செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி, நோய்த் தடுப்பூசி போடுவது மட்டுமல்லாமல் முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் இணைக்கப்பட்ட சங்கிலி இல்லாமல் அழைத்துச் செல்வதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்று உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ப்பு நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் வாய்மூடி இன்றி திரியவிட்டாலோ அல்லது அழைத்துச் சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

“அந்த செல்லப் பிராணியை அழைத்துச் செல்லும்பொழுது மற்றவர்களின் பாதுகாப்பைக் கருதி அதன் வாயை மூடியிருக்க செய்தும், கட்டாயம் கழுத்துப்பட்டையுடன் சங்கிலியால் கட்டி வைத்திருக்கவும் வேண்டும்.

“விலங்குகளின் நடவடிக்கைகள் நன்கு அறிமுகமான மனிதர்கள் மற்றும் அதன் இருப்பிட சூழ்நிலையிலிருந்து மற்ற இடங்களில் மாறுபட்டும் இருக்கக்கூடும். இதனை உரிமையாளர்கள் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் வளர்க்க வேண்டும்.

“பொது இடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள மின்தூக்கிகள் ஆகியவற்றில் மிகுந்த பாதுகாப்போடும் மற்றவர்களுக்கு அச்சுமூட்டும் வகையிலோ அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ நாய்களின் நடவடிக்கைகள் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பு,” என்று மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்