திருமணத்தைத் தள்ளிப்போட உத்தரவு; திரும்பப் பெற்ற அசாம் மருத்துவக் கல்லூரி

திருமணத்தைத் தள்ளிப்போட உத்தரவு; திரும்பப் பெற்ற அசாம் மருத்துவக் கல்லூரி

படம்: அசாம் மருத்துவக் கல்லூரி

19 Nov 2026 - 9:15 pm

1 mins read

கெளகாத்தி: அசாம் மாநிலம் திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி, முதுநிலை மருத்துவப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பு முடியும் வரை திருமணத்தைத் தள்ளிப்போட வேண்டும் என வெளியிட்ட சர்ச்சைக்குரிய உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது. 

அக்கல்லூரியின் பொது மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் பிரசாந்தா திஹிங்கியா புதன்கிழமை (நவம்பர் 18) அலுவலக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதில், பயிற்சி மருத்துவர்கள் நோயாளிகள் பராமரிப்பிலும் கல்வியிலும் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகப் பயிற்சிக்காலம் முடியும்வரை திருமணம் போன்ற தனிப்பட்ட நிகழ்வுகளைத் தள்ளிப்போட அறிவுறுத்தப்பட்டனர்.

அந்த உத்தரவிற்கு அகில இந்திய மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பு, ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தன.

திருமணத்திற்குத் துறைத் தலைவரிடம் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டுமா என எக்ஸ் தளத்தில் மருத்துவச் சங்கம் கேள்வி எழுப்பியது.

நோயாளிப் பராமரிப்பு அனைவருக்கும் பொதுவானது என்பதால், துறைத் தலைவர்கள் ஓய்வுபெறும் வரை வாரத்தின் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டுமா என்றும் அது சாடியது. பயிற்சி மருத்துவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தாமல், பணி நேரத்தை ஒழுங்குபடுத்துமாறு நிர்வாகத்திற்கு அச்சங்கம் அறிவுறுத்தியது.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே துறைத் தலைவர் அதை உடனடியாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். சம்பந்தப்பட்ட அனைவரும் அதனைக் கவனத்தில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்