புதுடெல்லி: பீகார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 366,000 பேர் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்ட 2,100,000 பேரின் விவரங்களை அக்டோபர் 9ஆம் தேதி வியாழக்கிழமைக்குள் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வின்முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, “பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் முழுமையாக இல்லை; நீக்கப்பட்டதற்கான காரணமும் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. அது தெரிந்தால் மட்டுமே அவர்களால் மேல்முறையீடு செய்ய முடியும்,” என்று மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி வாதிட்டார்.
மேலும், “வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், 21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கெனவே நீக்கப்பட்டவர்களா அல்லது புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களா என்பதும் தெரியவில்லை. ஆனால், இறுதிப் பட்டியலில் மேலும் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன்பின் கருத்துரைத்த நீதிபதி சூர்யகாந்த், “பீகார் மாநில இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கான காரணத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. முதலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில் எத்தனை பேர் மீண்டும் சேர்க்கப்பட்டனர் என்ற விவரமும் இல்லை,” என்றார்.
அதற்கு, “இறுதிப் பட்டியலில் பழைய வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்; புதிதாகச் சேர்க்கப்பட்டோரும் உள்ளனர். பீகாரில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் புதிய உத்தரவுகளைப் பிறப்பிப்பது தேர்தலைப் பாதிக்கும்,” என்று தேர்தல் ஆணையம் வாதிட்டது.
ஆனால், அதனது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “தேர்தல் என்பது பொதுவான ஜனநாயக நடவடிக்கை. அதில் குழப்பம் எதுவுமில்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு,” என்றனர்.
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, அதுபற்றிய விவரம் தெரிவிக்கப்படாத அனைவர்க்கும் மேல்முறையீடு செய்ய உரிமையுண்டு என்றும் நீதிபதிகள் கருத்துரைத்தனர்.