மதுரை: மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிரானைட் குவாரி விதிமீறல் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இருந்தவாறு காணொளி வாயிலாக முன்னிலையாக மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விக்கிரமங்கலத்தில் ஒரு கிரானைட் குவாரி விதிமீறல் தொடர்பாக 2013 ல் வழக்கு பதியப்பட்டது. கனிமவள குற்ற வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
அப்போதைய மாவட்ட ஆட்சியர் சகாயம் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்த நிலையில் சகாயம் முன்னிலையாக நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது.
அதற்கு சகாயம்,, “கிரானைட் குவாரி விதிமீறலில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமல், எனக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. எனக்கு அச்சுறுத்தல் உள்ளதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை. நிரந்தர பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்,” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பினார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சகாயம் முன்னிலையாக இயலவில்லை என்று சகாயம் கடிதம் அளித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து சகாயம் காணொளி மூலம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இருந்தவாறு ஜூலை 21ஆம் தேதி இந்நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
“இதைச் செய்யத் தவறினால் சாட்சியமளிக்க அழைப்பாணை அனுப்பப்படும். அந்நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்ய வேண்டும்,” என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.