தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அசல் நீதிமன்றம் போலவே போலி நீதிமன்றம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி

2 mins read
bf44bfa7-8451-4760-ae9d-080d6885c733
போலி நீதிமன்றம் நடத்திய கிறிஸ்டியன். - படம்: ஊடகம்

அகமதாபாத்: குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி பெயரில் இருந்த பலகோடி ரூபாய்க்கான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு போலி நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் (37). இவர் குஜராத் தலைநகர் காந்திநகரில் வாடகைக் கட்டடத்தில் 2019ஆம் ஆண்டு முதல் போலி நீதிமன்றத்தை உருவாக்கி, அதில் போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து இருக்கிறார்.

நில விவகாரங்கள் சார்ந்த சிறப்பு தீர்ப்பாயத்தின் நீதிபதி என்று பொது அரங்கில் தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.

நிலங்கள் சார்ந்து தொடரப்பட்ட வழக்குகளின் மனுதாரர்களை கிறிஸ்டியனின் போலி வழக்கறிஞர்கள் அணுகி, சிறப்பு தீர்ப்பாயத்தில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்து, கிறிஸ்டியனின் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்யச் செய்துள்ளனர்.

அசல் நீதிமன்றம் போன்றே போலி நீதிபதி கிறிஸ்டியன் மனுக்கள் மீது விசாரணை நடத்தி உள்ளார். அவரது நீதிமன்றத்தில் நாள்தோறும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று உள்ளன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு கிறிஸ்டியன் தனக்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் பாபுஜி என்பவர் ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார். சுமார் 50 ஆண்டு காலம் அரசு நிலத்தில் குடியிருப்பதால் அந்த நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று பாபுஜி கோரியுள்ளார்.

வழக்கை விசாரிக்க போலி நீதிபதி கிறிஸ்டியன், மனுதாரர் பாபுஜியிடம் இருந்து ரூ.30 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட அரசு நிலம் பாபுஜிக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.

அதனைத்தொடர்ந்து பாபுஜி, அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனது பெயரில் மாற்ற வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

தீர்ப்பு நகலைப் பார்த்து சந்தேகமடைந்த நீதிமன்ற பதிவாளர் ஹர்திக் தேசாய், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே கிறிஸ்டியனின் மோசடி அம்பலத்துக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஓராண்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட வழக்குகளில் கிறிஸ்டியன் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அவரது பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.

இதுகுறித்து போலிசார் கூறுகையில், “ஐந்து ஆண்டுகளாக போலிஸ் வலையில் சிக்காமல் மிகப்பெரிய மோசடிகளைச் செய்து 100 ஏக்கர் நிலங்களை தனது பெயருக்கு மாற்றியிருக்கிறார். மக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை அவர் அபகரித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்