புதுடெல்லி: கொவிட்-19 தொற்றுக்கான கொவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் கிட்டத்தட்ட மூவரில் ஒருவருக்கு ஓராண்டுக்குப் பிறகு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் 926 பேர் பங்கேற்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, அவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. அவர்களில் பலரும் மூச்சுக்குழாய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனக்கா, தனது கொவிட்-19 தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுகள் (பிளேட்லெட்) எண்ணிக்கை குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வறிக்கை, ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ எனும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
ஆய்வில் பங்கேற்றோரில் 635 பேர் வளரிளம் பருவத்தினர்; 291 பேர் பெரியவர்கள். கொவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஓராண்டிற்குப் பிறகு, அவர்களுக்கு நீண்டகால உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது என்று தொலைபேசிவழி அவர்கள் நேர்காணப்பட்டனர்.
அவர்களில் பெண்கள் மூவர், ஆடவர் ஒருவர் என நால்வர் உயிரிழந்துவிட்டனர். அந்நால்வருக்கும் நீரிழிவு பாதிப்பும் மூவருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.