ஆற்றில் பசுக்களின் சடலங்கள் மிதந்ததால் அதிர்ச்சி

1 mins read
f2ba3ac8-3f06-4681-ac63-bf279b1547c6
ஆற்றில் மிதந்த பசுக்களின் சடலங்களை மீட்டு அப்புறப்படுத்தும் முயற்சியில் உத்தரப் பிரதேச மாநில பேரிடர் மீட்புப் படையினர். - படம்: இந்திய ஊடகம்

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சீதாப்பூரில் ஓடும் சராயன் ஆற்றில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட பசுக்களின் சடலங்கள் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் புதன்கிழமை (பிப்ரவரி 14) ஏழு மணி நேரமாகப் போராடி கிட்டத்தட்ட 30 பசுக்களின் சடலங்களை அகற்றினர். ஆனால், அதன்பின்னும் மேலும் சில பசுக்களின் சடலங்கள் மிதந்து வந்தன.

இதனையடுத்து, இவ்விவகாரம் குறித்து விசாரிக்க மாநில அரசு ஒரு தனிக் குழுவை அமைத்துள்ளது. அத்துடன், மாவட்ட நிர்வாகம் ஒரு தனி விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

மீட்கப்பட்ட பசுக்களின் சடலங்களை உடற்கூறாய்வு செய்த கால்நடை மருத்துவர்களாலும் அவற்றின் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.

“பசுக்களின் தோலும் உடலுறுப்புகளும் மிகவும் அழுகிப் போயிருப்பதால் அவற்றின் இறப்பிற்கான காரணத்தை உறுதிசெய்வது சிரமமாகியுள்ளது,” என்று அவற்றை உடற்கூறாய்வு செய்த கால்நடை மருத்துவர்களில் ஒருவர் கூறினார்.

இதனிடையே, கோமதி ஆற்றிலும் கிட்டத்தட்ட 22 பசுக்களின் சடலங்கள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பசுக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உத்தரப் பிரதேச அரசாங்கம் கடும் நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

ஆயினும், பசுக்களின் சடலங்கள் அங்கு ஆற்றில் மிதந்தது இது முதன்முறையன்று. கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் காளி, கங்கை ஆறுகளில் கிட்டத்தட்ட 37 பசுக்களின் சடலங்கள் மிதந்தன.

குறிப்புச் சொற்கள்