புதுடெல்லி: இந்தியாவின் மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்துவரும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட 7,229 வழக்குகள் நீதிமன்ற விசாரணைகள் முடிவடையாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் (சிவிசி) ஆண்டறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், நிலுவையில் உள்ள வழக்குகளில் 409 வழக்குகள் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடப்பது தெரியவந்துள்ளது. மேலும் 10 முதல் 20 ஆண்டுகள் வரை பழைமையான வழக்குகள் 2,447 என்ற எண்ணிக்கையில் உள்ளன.
விசாரணை நீதிமன்றங்கள் மட்டுமின்றி, உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் தொடர்பான 14,083 மேல்முறையீடு, சீராய்வு மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதில் 739 மனுக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் தொடர்கின்றன.
வழக்கு விசாரணைகள் தாமதமாவதற்கு முக்கியக் காரணங்களாகச் சில அம்சங்களை சிவிசி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து ஆவணங்களைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதம், சொத்துக்குவிப்பு வழக்குகளில் சொத்து ஆவணங்களைச் சரிபார்க்க எடுக்கும் கூடுதல் நேரம், பொருளியல் குற்றங்கள், வங்கி மோசடி வழக்குகளில் பெருமளவிலான ஆவணங்களை ஆய்வு செய்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவை தாமதம் ஏற்பட முக்கியக் காரணிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இருப்பினும், சிபிஐயின் வழக்கு முடித்து தண்டனை வாங்கித் தரும் விகிதம் 2024ல் 69.14 விழுக்காட்டில் இருந்து, 2025ல் 71.71 விழுக்காடாக உயர்ந்துள்ளது.


