தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அணை நிரம்பி வழிவதால் 2 கி.மீ. நீளத்திற்குப் பெரும்பள்ளம்

2 mins read
06f988e9-ebaf-4288-a385-1098ac8a91fc
பெரும்பள்ளத்தில் வெள்ளநீர் கொட்டி, பாய்ந்தோடுவது புதிய அருவிபோல் காட்சியளிக்கிறது. - படம்: இந்திய ஊடகம்

ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடைவிடாது பெய்துவரும் மழையால் சுர்வால் அணை நிரம்பி, நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சவாய் மாதோப்பூர் மாவட்டத்தில் நிலம் உள்வாங்கி இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்குப் பெரும்பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதனால், அதிகமான வேளாண் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

ஜடாவத்தா எனும் சிற்றூருக்கு அருகே இரண்டு கி.மீ. நீளம், 100 அடி அகலம், 55 அடி ஆழத்திற்குப் பெரும்பள்ளம் உருவாகி, கிட்டத்தட்ட ஓர் அருவிபோல் காட்சியளிக்கிறது.

மழை தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இரண்டு வீடுகள், இரண்டு கடைகள், இரண்டு கோவில்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 

அதனையடுத்து, அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். ராணுவத்தினரும் மீட்புப் படையினரும் அப்பகுதியில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

பலரும் வீடுகளின் கூரைப்பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பெருமழை காரணமாக ராஜஸ்தானின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல சிற்றூர்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன; பல ஊர்களுக்கான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

கோட்டா, பண்டி, சவாய் மாதோப்பூர், ஜலாவர் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் துயர்துடைப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும் தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனாவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஷ் சந்திர மீனாவும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே, வரும் நாள்களிலும் பெருமழைக்கு வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்கும்படி இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்