2029ல் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் அமல்: பி.பி.சவுத்ரி தகவல்

2029ல் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் அமல்: பி.பி.சவுத்ரி தகவல்

2 mins read
bff33c87-498d-4623-8eb4-a98892c2244b
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம், வரும் 2029ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது முழுமையாக அமல்படுத்தப்படும் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டம் தொடர்பாக பாஜக மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான பி.பி.சவுத்ரி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் கோவாவில் தொடங்கியது.

இக்கூட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

“ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அவற்றைப் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகக் களைந்து, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான கொள்கைகளை வரையறுக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

“இதுதொடர்பாக குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள், சட்ட நிபுணர்களிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

“இதுவரை பெறப்பட்ட பொதுமக்களின் கருத்துகளில் ஏறக்குறைய 99 விழுக்காட்டினர் இத்திட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்,” என்று பி.பி.சவுத்ரி கூறினார்.

ரூ.7 லட்சம் கோடி இழப்பு

தனித்தனியாக தேர்தல்களை நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசிய அவர், “ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல்கள் நடத்தப்படுவதால், நாட்டிற்கு ஏறக்குறைய 7 லட்சம் கோடி ரூபாய் வரை பொருளாதார இழப்பு ஏற்படுவதாக முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள் முடங்குவது மட்டுமன்றி, அண்டை மாநிலங்களின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

“குறிப்பாக, தேர்தல் காலங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதால் கோவா போன்ற மாநிலங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றன,” என்றார்.

மேலும், அடிக்கடி தேர்தல் நடப்பதால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் அன்றாடச் செயல்பாடுகளும் மாணவர்களின் கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்தார்.

இந்த ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வாகவே இத்திட்டம் கொண்டுவரப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஒரே நாடு ஒரே தேர்தல்திட்டம்மத்திய அரசுஅரசியல்