புதுடெல்லி: இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த 100 வயது சுதந்திரப் போராட்ட வீராங்கனைக்கு இந்திய அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் ஆக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் குடியரசு தினத்துக்கு முதல் நாளான சனிக்கிழமையன்று (ஜனவரி 25) லிபியா லோபோ சர்தேசாய் என்ற அந்த மாதுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருவாட்டி லிபியா லோபோ சர்தேசாய், போர்ச்சுகீசிய ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.
குவைத்தில் உரிமத்துடன் தொடங்கப்பட்ட முதல் யோகாசனக் கூடமான தராத்மாவை (Daratma) நிறுவிய அந்நாட்டின் 48 வயது ஷைக்கா அஜ் அல் சாபாவும் பத்மஸ்ரீ விருதைப் பொருவோரில் ஒருவர். அவர், போரால் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்ட ஏமனிய அகதிகளுக்கான 2021 நிதி திரட்டு இயக்கத்தையும் வழிநடத்தினார் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 57 வயது ‘தக்’ (dhak) விளையாட்டு வீரரான கோகுல் சந்தர தேவ் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 26) அதன் 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது.