பஹல்காம் தாக்குதல் நினைவு நாள்: இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை

பஹல்காம் தாக்குதல் நினைவு நாள்: இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை

2 mins read
d900109b-3802-48e1-980c-e1b1ec05cbee
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். - படம்: காஷ்மீரிசெர்வர்.நெட்

ஸ்ரீநகர்: இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர்க்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

மனிதாபிமானத்தின் எல்லைகள் மீறப்படும்போது, அதற்கான பதிலடி தீர்க்கமானதாக இருக்கும் என்றும் இந்திய ராணுவம் மேலும் கூறியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்திற்கும் ஒருபோதும் அடிபணியாது எனப் பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.

பயங்கரவாதிகளின் கொடூரமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் திடீர்த் தாக்குதல் மேற்கொண்டனர். அதில், 26 அப்பாவிகள் உயிரிழக்க நேரிட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் பதுங்கும் இடங்கள், பயங்கரவாதப் பயிற்சி அளிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்நிலையில், நாட்டிற்கு எதிரான எந்தவொரு தீயச் செயலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எப்போதும் நீதி நிலைநாட்டப்படும் என்றும் இந்திய ராணுவம் தனது சமூகப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

‘ஆப்பரேஷன் மகாதேவ்’ மூலம் பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டதை இந்திய ராணுவம் நினைவுகூர்ந்துள்ளது.

‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை நீடிப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ள இந்திய ராணுவம், படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, துல்லியமான செயல்பாடு ஆகியவை தேசிய உறுதிப்பாட்டின் சின்னம் என்றும் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலின் இழப்பைச் சமாளித்துவரும் துயருற்ற குடும்பத்தினருடன் தனது எண்ணங்களும் இருப்பதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

“கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைவுகூர்கிறோம். அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள்.

“ஒரு தேசமாக, நாம் துக்கத்திலும் உறுதியிலும் ஒன்றுபட்டு நிற்கிறோம்,” என்று தமது எக்ஸ் பக்கத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, பயங்கரவாதத்துக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்தியது கோழைத்தனமான தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்